நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல் பணிகளில் 3 இலட்சத்து 50 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, August 2nd, 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று 2 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

அதன்படி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவது, வீடு வீடாகச் செல்வது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, விளம்பர பலகைகளைக் காண்பிப்பது, சுவரொட்டிகளைக் காண்பிப்பது, தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலில் இடம்பெற்ற வன்முறையின் அளவு குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம்  அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரம் நடவடிக்கைகள் யாவும் நிறைவடைய உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது இறுதி பொதுக் கூட்டங்களுக்கு நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது

.

Related posts: