நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்லும் வகையிலான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021

காலம் கடந்த கல்விக் கொள்கையினால் நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்ல முடியாத சமூகம் ஒன்றே உருவாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாட்டின் சிந்தனை மற்றும் தெலைநோக்கு உருவாகுவது அந்நாட்டின் கல்விக் கொள்கையின் மூலமேயாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான ‘எண்மான தளத்தை’ உருவாக்குவதற்காக அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்தள்ள ஜனாதிபதி –

‘எண்மான தளம்’ கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து ‘பேண்தகு கல்விக் கொள்கை சட்டகமொன்றை’ உருவாக்குவதற்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பமாகும் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி பரந்தளவிலான மக்கள் பிரதிநிதித்துவத்துடன் உருவாகும் ஒரு கொள்கையை, அரசாங்கம் மாறும்போது மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில், அறிவை மையப்படுத்திய மனித வள மூலதனத்தை திட்டமிட்டு போஷிப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக பல்வேறு கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் அடுத்துவரும் 03 மாதங்ளுக்கள் egenuma.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம், மக்கள் புதிய கல்வி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை ‘எண்மான தளத்துக்கு’ அனுப்ப முடியும்.

முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி, தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, உயர் மற்றும் தொழிற் கல்வி என்ற பிரதான 04 உப துறைகளின் கீழ் மறுசீரமைப்பு ஆலோசனைகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

பேண்தகு கல்விக் கொள்கை ஒன்றுக்காக மிகவும் பரந்தளவில் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ‘எண்மான தளம் ‘ திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயர் கல்விக்கு பிரவேசிப்பதற்கு அதிக வாய்ப்புக்களை வழங்குவது மறுசீரமைப்பின் மற்றொரு நோக்கமாகும்.

பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன், மறுசீரமைப்பின் மூலம் தொழில்திறன் விருத்தி, தொழிலில் ஈடுபடும்போது தமது கல்வித் தகைமைகளை விருத்தி செய்து கொள்வதற்காக திறந்த பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையான மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: