நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

Saturday, July 11th, 2020

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் -25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றினைத் தொடர்ந்து தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய எமது சுகாதார வைத்திய அதிகாரி சில விடயங்களைத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில் இம்முறை மஹோற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்ற செயற்பாடுகளை உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள முடியாதென்பதால் அவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்தும். எனினும், உற்சவகாலத்தில் ஆலயத்திற்கு வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே பொறுப்பாளிகள்.

தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய இதுதான் நடைமுறை எனில் அதனைப் பின்பற்றுவதற்குத் தயாரென ஆலய நிர்வாகத்தினர் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் எங்களிடமில்லை. தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.

ஆலய உற்சவம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் குறித்த காலப் பகுதிக்குள் ஏதாவது தளர்வுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தயாராகிவிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: