நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு – அறிக்கை கோருகின்றார் ஜனாதிபதி !

Wednesday, January 4th, 2023

நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டு நிறுவனங்களில், பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த நிறுவனங்களிடம் இருந்து அறிக்கையை கோரியுள்ளார்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே ஜனாதிபதி அறிக்கையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

2022 மற்றும் 2023ஆம் நிதியாண்டின் அரையாண்டு காலப்பகுதியில், ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில் 112.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் 170.4 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதோடு, 284.5 பில்லியன் ரூபா செலவினம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம், இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், கடந்த வருட ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 549 பில்லியன் ரூபா நட்டமடைந்ததாக தகவல்கள் வெளியாகிருந்தன.

கனியவளக் கூட்டுத்தாபனம், இரண்டு மாதங்களுக்கான வேதனத்தை அதன் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளது.

அதேநேரம், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், அதன் ஒவ்வொரு பணியாளருக்கும், மேலதிக கொடுப்பனவாக, ஒரு இலட்சம் ரூபா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனியவளக் கூட்டுத்தாபனத்தில், 4 ஆயிரத்து 200 ஊழியர்கள் உள்ள நிலையில், உயரதிகாரிகள் மத்தியில், 5 இலட்சம் ரூபா வேதனம் பெறும் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களில் சில அதிகாரிகளுக்கு, 10 இலட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையில், 5 ஆயிரத்து 800 ஊழியர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு 13 ஆவது மாதம் எனக் குறிப்பிட்டு, ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: