தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Friday, June 25th, 2021

கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா ஒழிப்பிற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் 135 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்

இந்நிலையில்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின், பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இயலுமானவரை வீடுகளிலிருந்து பணிபுரியுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவடிக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக் குழுவினால் இன்று தீர்மானிக்கப்படும் என்று மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பயணக் கட்டுப்பாட்டை மேலும் அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை, பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: