தொடரும் மோசடிகள் – ஆட்டம் காணும் அரசு – நிலக்கரியை அடுத்து தபால் திணைக்களத்தில்!

Wednesday, April 29th, 2026

தபால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் கொடுப்பனவு ஒன்று உரிய தரப்பினருக்கு கிடைக்கப்பெறாமை தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விசேட வெளிப்படுத்தலொன்றை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர், மகா திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் விளக்கமளித்துக் கொண்டிருந்த போதே தபால் திணைக்களத்தின் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், தபால் திணைக்களத்தினால் ‘US Post’ நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட 6 இலட்சம் டொலர் பணம் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதன்படி, இது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

“நிறுவனங்களில் இடம்பெறும் இவ்வாறான முறைகேடுகள் அல்லது தவறுகள் தொடர்பில் அந்தந்த நிறுவன மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிதி அமைச்சும் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் உள்வாரி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முன்னரே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படுவதில்லை.

தேவையென்றால் நான் இன்னொன்றைக் கூறுகிறேன், இலங்கை தபால் திணைக்களத்தினால் US Post நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட 6 இலட்சம் டொலர்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இவை நிறுவன மட்டத்தில் செய்யப்பட வேண்டியவை. அது எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு என்ன நடந்துள்ளது என்றால், US Post நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 6,25,000 டொலர்கள் கிடைக்கவில்லை என அந்தத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தபால் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன

000

Related posts: