தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் – அரச அதிபரிடம் மக்கள் கோரிக்கை!

Wednesday, December 19th, 2018

வலி.வடக்கு தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாமென அப்பகுதி மக்கள் அரச அதிபரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

வலி.வடக்கு தையிட்ட ஆவளைப் பகுதியில் மயானம் அமைக்க முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக இன்று (19) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.  அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வலி.வடக்கு தையிட்டி ஆவளை பகுதியில் மயானம் அமைப்பதை கண்டித்து பல போராட்டங்களை முன்னெடுத்ததுடன், கடந்த ஒரு வருடகாலமாக பல்வேறு தரப்பினருடன் எமது பிரச்சினைகளை தெரியப்படுத்தி வந்தோம். ஆனால், வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தனது தன்னிச்சையான செயற்பாட்டின் மூலம் அந்தப் பகுதியில் மயானம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

ஏற்கனவே ஒரு மயானம் இருக்கும் நிலையில், தற்போது, இந்தப் பகுதியில் சுமார் 2 பரப்புக் காணியே உள்ளது. இந்தக் காணியில் மயானம் அமைத்தால், அங்கு கடற்றொழில் செய்யும் எமக்குப் பாதிப்பு, கடலில் பிடிக்கும் மீன்களை விற்க முடியாது. எமது இயல்பு நிலை பாதிக்கப்படும்.  கடந்த 30 வருட காலமாக நலன்புரி நிலையத்தில் பல துன்பங்களை அனுபவித்த நாம். இன்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, எமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும், எமக்குப் பிரச்சினை உருவாக்க பிரதேச சபை தவிசாளர் முற்படுகின்றார்.

அந்தப் பகுதியில் உள்ள இரண்டு பரப்புக் காணியில் இளைப்பாறும் மண்டபமோ அல்லது சங்க கட்டிடம் கட்டுவதற்கோ இடமில்லை.  இவ்வாறான நிலையில், அந்தப் பகுதியில் மயானம் அமைக்க வேண்டுமென அரசியலுடன் தொடர்புடைய தவிசாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.  எமது பிரதேசத்தில் மயானத்தை அமைக்க அனுமதிக்க வேண்டாமென வலியுறுத்தி அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினோம்.
பிரதேச செயலகம் மற்றும் ஏனைய தரப்பினரிடம் எமது பிரச்சினையை எடுத்துக் கூறிய போது, எமது பிரச்சினைக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால், அரச அதிபருடனான சந்திப்பில், , எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையின் பின்னர், மேலதிக நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்போம் என்றும் அந்த பகுதி மக்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts: