தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்களில் எரிபொருள் – திங்கள்முதல் எரிவாயு உற்பத்தியும் வழமைக்கு துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Friday, April 15th, 2022

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறு நபர்களுக்கு கேன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டை தடுப்பதற்கும் பல்வேறு மோசடிகளை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, கைத்தொழில் நோக்கங்களுக்காக கேன்கள் மற்றும் பெரல்களுக்கு எரிபொருளை பெற அவசியமானால், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு கமநல சேவை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கள்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்கு தேவையான 10 மில்லியன் டொலரை பெற்றதாக லிட்ரோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், எதிர்காலத்தில் 8,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்த போதிலும் அதற்கிணங்க இலங்கையில் விலை அதிகரிக்கப்படாமை, கடந்த இரண்டு மாதங்களாக போதிய நாணயக் கடிதங்கள் வழங்கப்படாததாலும், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததாலும் தற்போது அனைத்து எரிவாயு கையிருப்புகளும் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் 2,600 மில்லியன் ரூபா நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

இவ்வாறான நிலையில் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்ட நேற்று வரை இம்மாதம் 13 நாட்களில் 800,000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை - மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச...
கப்பலில் தீப்பரவல் - சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவ...
அரச அதிகாரிகளாளும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம் - பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்க...