தேர்தல் நடத்துவதன் மூலம் நாடு மேலும் வீழ்ச்சியடையும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Monday, January 9th, 2023

பொருளாதார ரீதியில் நாடு வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் தேர்தலொன்றை நடத்துவதன் மூலம் நாடு மேலும் வீழ்ச்சியடைந்து, மக்கள் பாரிய நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (8) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது தான் ஓரளவு தலைதூக்கி வர ஆரம்பித்துள்ளது. இவ்வாறான நிலையில் தேர்தலொன்றை நடத்தினால், நாடு மீண்டும் பழைய நிலைக்கு சென்று, மக்கள் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

அத்துடன் தற்போது வேட்புமனு கோரி இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் நாட்டில் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. மாறாக, இந்த தேர்தலை நடத்துவதன் மூலம் நாட்டில் இருக்கும் பணத்தை செலவிட்டு, தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் 8 ஆயிரம் உறுப்பினர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையே ஏற்படுகின்றது.

அதனால்தான் இந்த தேர்தல் முறையில் திருத்தம் கொண்டுவந்து, உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேபோன்று இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

மேலும், எந்த தேர்தலானாலும் உரிய காலத்துக்கு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே தற்போதைக்கு தேர்தல் நடத்துவது பொருத்தம் இல்லை என்று தெரிவிக்கின்றோம்.

2022 இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான வருடமாக கறுப்புக் கரையொன்று வரலாற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும், 2023 நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் முக்கியமான வருடமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

இந்த வருடத்துக்குள் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதே ஜனாதிபதியின் இலக்காகும். அதேபோன்று பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தே தீருவார் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: