தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது – பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2023

நாட்டிலுள்ள நிதி நிலைமையின் அடிப்படையில் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு 16 பில்லியன் செலவாகக் கூடும். எனினும் தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது. கட்டம் கட்டமாக திறைசேரியினால் இதற்கான நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர்,  இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்

தேர்தலுக்காக பணத்தை அச்சிட முடியாது. கடன் மறுசீரமைப்பு மற்றும் அத்தியாவசிய கடன்களை மீள செலுத்தல் தவிர்ந்த வேறு எந்தவொரு காரணிக்காகவும் பணத்தை அச்சிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இதுவே அராசங்கத்தின் கொள்கையாகும். அரசாங்கத்தின் கொள்கை மீறப்பட்டால் இதனை விட பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு 8 பில்லியன் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்  இம்முறை நாட்டு நிலைமைகளுக்கமைய இந்த செலவுகள் இரு மடங்காக அதிகரிக்கக் கூடும்.

எனவே இம்முறை 16 பில்லியன் செலவாகக் கூடும். எவ்வாறிருப்பினும் தேர்தல் செலவுகளுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்குவதாக திறைசேறி செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் மின்சாரம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: