தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் 7 நாட்களுக்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா!

Friday, February 12th, 2021

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சி ஒன்று 7 நாட்களுக்குள் தெரிவு செய்யாவிடத்து குறித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்தை நிரப்பும் அதிகாரத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு புதிய அரசியல் யாப்புக்கான நிபுணர் குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர், கட்சி அல்லது குழுவொன்றினால் 7 நாட்களுக்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த 7 நாட்களில் அவ்வாறு ஒருவர் தெரிவு செய்யாவிடத்து அதற்கு பின்னர் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் வெற்றிடமாகவே காணப்படுகின்றன.

எனவே, அவ்வாறு பெயரிடப்படாத சந்தர்ப்பங்களில் அவர்களால் முன்வைக்கப்படும் தேசியப்பட்டியலின், முன்னுரிமை அல்லது வேறு வழிகளில் உறுப்பினரை தெரிவு செய்யும் அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

அத்துடன், வேட்பாளர் ஒருவர் தேர்தலின் போது செலவான தொகை தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவ்வாறு செய்யத்தவறுபவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போகக்கூடும் என்ற விடயத்தை உள்ளடக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: