தென்னிந்தியாவும் வட இலங்கையும் இணைய வேண்டும் : -யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்

Wednesday, March 9th, 2016

கலைகளை மாத்திரமன்றி எமது  மொழியைப் பாதுகாப்பதிலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் முன்னோடிகளாக விளங்குகின்றனர் எனத  யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ.நடராஜன தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்.இந்தியத் துணைத் தூதரகம், யாழ். திருமறைக் கலாமன்றம் ஆகியன கொழும்பு அருள் ஸ்ரீ கலைக் கூடத்துடன் இணைந்து நடாத்திய  பரத நாட்டிய நிகழ்வு நேற்று (08) பிற்பகல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் –

எங்களுடைய நோக்கம் தெற்கையும் வடக்கையும் இணைக்க வேண்டும் என்பதாகும். நான் கூறும் இணைப்பு என்பது தென்னிந்தியாவையும் வட இலங்கையையும்  இணைப்பதாகும்.தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்கின்ற போதும் யாழ்ப்பாண மக்களைப் பொறுத்த வரை நமது கலை,நமது பண்பாடு,நமது கலாசாரத்தைப் பேணுவதில் முன்னிற்கிறார்கள் இதனால் தான் எத்தனை தடவை  கூறினாலும் யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமையைக் கூறுவதில் நான் சலித்துப் போனதில்லை. அதுமட்டுமன்றி  வடமாகாண மக்கள் ,கிழக்கு மாகாண மக்கள் ஆகியோரும் நமது பாரம்பரியக் கலைகளைப் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள்.

வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு சதா காலமும் முயற்சிக்க வேண்டும். வாழ்க்கையின் இறுதி வரை நாங்கள் கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர்  சீக்கியரான பகவத் சிங் இந்திய விடுதலைக்காகப் போராடினார். அவரை நாங்கள் விடுதலை வீரர் என அழைத்தாலும் ஆங்கிலேயேர்கள் அவரைத் தீவிரவாதியெனவே அழைத்தனர். அவர் ஒரு தடவை  இந்தியப் பாராளுமன்றத்தில்  குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் வைத்து ஆங்கிலேய அதிகாரிகள் உன்னுடைய இறுதி ஆசை என்ன? எனக் கேட்டனர். அதற்கு அவர் என்னுடைய இறுதி ஆசை எனக்குத் தண்டனை வழங்கப்படும் போது என் முகம் மூடியிருக்கக் கூடாது. நான் அதனை விரும்பவில்லை என்றார்.

சிறைச்சாலையிலிருந்து தூக்கு மேடைக்கு பகவத் சிங்கை அழைத்துச் செல்லும் போது அவர் தன்னுடைய கைகளில் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். அவ் வேளையில்  இப்போது கற்பதால் என்ன பயன்? என அவரைப் பார்த்துக் கேட்ட போது நான் என் வாழ்வின் இறுதியிலும் அறிவாளியாகவே இறக்க விரும்புகிறேன் எனப் பதிலளித்தார். அவர் இறுதியாகப் படித்த புத்தகத்தை இப்போதும் இந்தியாவின் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாத்துரை கூட அவ்வாறு தான்.

அவர் ஒரு தடவை அமெரிக்காவுக்கு அறுவைச் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அவர் புத்தகமொன்றை வாசித்தவாறு மருத்துவரைப் பார்த்து  ஐயா இந்த அறுவைச் சிகிச்சையை ஒரு நாள் தள்ளிப் போட முடியுமா? எனக் கேட்டார். மறுத்தவர் ஏன்? எனக் கேட்ட போது இந்தப் புத்தகம் முழுவதையும் நான் ஒருநாளில் படித்து முடித்திடுவேன் என்றார். அவரது வேண்டுகோளுக்கிணங்க குறிப்பிட்ட புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்த பின்னரே அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, இதிலிருந்து நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும்  படித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: