துறைமுகங்களின் அபிவிருத்திக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற தீர்மானம் – அமைச்சர் ரணதுங்க!

Saturday, April 1st, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில், இலங்கையின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களையே இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்று இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியா முதலீடு செய்து இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அதனை இயக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் இந்தியா ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு துறைமுகம் வழியாக 75 வீதமான கொள்கலன்கள் இந்தியாவுக்கே செல்கின்றன. கொழும்பு துறைமுகத்தில் பங்காளராக இணைய இந்தியா எதிர்பார்க்கிறது. உலகின் ஐந்தாவது மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகம் மீதும் இந்தியா மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது. இந்தியன் ஓயில் நிறுவனத்தினால் பல ஆண்டுகளாக இயக்கப்படும் பெற்றோலிய குதங்கள் இருப்பதால், திருகோணமலை மீது இந்தியா பெரிய ஆர்வம் கொண்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதிலும் இலங்கை அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளது. அது இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. அது கொள்கலன் துறைமுகம் அல்ல. சீமெந்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு அதனைப் பயன்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: