தீவகத்தில் தென்னை மற்றும் கஜு பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்பட வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கைக்கு அமைச்சர் ரமேஸ் பத்திரன இணக்கம்!

தீவக பிரதேசத்தில் தென்னைமரச் செய்கையை மற்றும் மரமுந்திரிகைச் செய்கை ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான ஏதுநிலைகள் அதிகமாக காணப்படுவதால் இப்பகுதியில் அவற்றை செய்கைபண்ணுவதற்கான முயற்சிகளை உருவாக்கி தருமாறு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி அனுசியா ஜெகயாந்த் விடுத்திருந்த யோசனையை ஏற்று அதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே இவ்வாறு கோரியுள்ளார்.
இது தொடர்பில் திருமதி அனுசியா ஜெயகாந்த் மேலும் அவர் கூறுகையில் –
தீவகம் ஒரு மணற்பாங்கான இடமாக காணப்படுவதால் எமது பிரதேசத்தில் தென்னை மரச் செய்கை மற்றும் மரமுந்திரிகை செய்யையை ஊக்குவிப்பது சிறந்தது.
அத்துடன் இதற்கான நடவடிக்கைகளை மண்டைதீவுமுதல் குறிகாட்டுவான் வரையும் அதே போல நெடுந்தீவின் கரையோர பிரதேசங்கள், ஊர்காவற்றுறை கடற்கரையோர பிரதேசங்களிலும் இனங்காணப்படும் பகுதிகளிலும் நடுகைசெய்ய முடியும்.
அதேபோன்று மரமுந்திரிகை செய்கையையும் எமது பிரதேசத்தில் முன்னெடுக்க முடியும். குறிப்பாக வேலணை பிரதேசத்தின் மண்கம்பான் பகுதியில் இதை பயிரிட முடியும் என துறைசார் தரப்பினரது ஆலோசனைகளூடாக அறிய முடிகின்றது எனவே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களது பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.
இந்நிலையில் குறித்த யோசனையை ஏற்ற அமைச்சர் ரமேஸ் பத்திரன துரித கதியில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் எவ்வளவு தொகையான மரங்கள் வேண்டுமானாலும் அதை பெற்றுத்தருவதற்கு தான் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|