திருவிழாக்களை காரணம் காட்டி மக்களிடம் பல இலட்சக்கணக்கில் பண சேகரிப்பு –புத்திஜீவிகள் கவலை!

Tuesday, July 25th, 2023

அண்மைக் காலமாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் திருவிழாக்களை காரணம் காட்டி அப்பகுதி மக்களிடம் பல லட்சக்கணக்கில் பண சேகரிப்பில் அப்பகுதி கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக 10 தொடக்கம் 12 நாள் திருவிழாவுக்கு குடும்பம் ஒன்றிடம் இருந்து 40 ஆயிரம்  ரூபா தொடக்கம் 1 லட்சம்  ரூபாய் வரை கோவில் நிர்வாகத்தினர் நன்கொடையாக சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பின்தங்கிய குடும்பம்,  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் போராளிகளைக் கொண்ட மாந்தை பகுதியில் கட்டாய அடிப்படையில் கோவில் திருவிழாக்களுக்கு என நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில் திருவிழாக்களை சிக்கனமாகவும் அழகாவும் குறைந்த செலவிலும் மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானங்களை  ஏழைகளுக்கும், கஷ்டப்பட்ட குடும்பங்களின் வளர்ச்சிக்காகவும் பயன்  படுத்துவதவையே கடவுள் கூட விரும்பும் நிலையில் கெளரவத்திற்காகவும் வெளிநாட்டு பணத்தை வீண் விரயம் செய்வதற்கு மன்னார் மாந்தை பகுதியில் இவ்வாறான கோவில் திருவிழாக்களையும் கடவுள் நம்பிக்கையையும் சில குழுக்கள் பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் அக் கிராமங்களை சேர்ந்த வெளிநாட்டு வாழ் குடும்பங்களையும் விட்டு வைக்காது அவர்களிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஆடம்பர கோவில் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அண்மையில் ஒரு கோவில் திருவிழாவுக்கு மின் அலங்காரத்திற்கும் ஒலி பெருக்கிக்கு ஆக 20 லட்சம் செலவு செய்துள்ளனர்.

அதே நேரம் மற்றும் ஒரு கோவிலுக்கு பூசாரி சம்பளம், மேளம் தாளம், ஒலி, ஒளி,சாத்துபடி சேவைக்கு 20 லட்சம் செலவு என்ற அடிப்படையில்  பணம் வசூலித்து வருகின்றனர்.

மேலும் கடந்த பல வருடங்களாக மாந்தை பகுதியில் உள்ள பள்ளமடு வைத்திய சாலை அடிப்படை வசதிகள் பல இன்றி காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு கோவில் திருவிழாக்களுக்கு மேற்கொள்ளும் அனாவசிய செலவில் இருந்து ஒரு  பகுதியையாவது குறித்த வைத்திய சாலைக்கு வழங்க முன்வருமாறு வெளிநாட்டு மற்றும் அப்பகுதியை சேர்ந்த புத்திஜீவிகள் கோரிக்கையாக முன்வைக்கின்றனர்

Related posts: