திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Monday, February 20th, 2023

திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு போதியளவு பணம் கிடைக்கப்பெறாத நிலையில் அச்சிடல் பணிகள் அரசாங்க அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனால், அரசாங்க அச்சகம் உரிய வகையில் வாக்குசீட்டுகளை வழங்காமையினால், எதிர்வரும் 22, 23,24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை காலவரையறையின்றி பிற்போட தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.

இதனிடையே, எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் திட்டமிட்டவகையில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லையென உயர் நீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: