தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

Sunday, June 2nd, 2019

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து உரிய தரப்பினர்கள் எனக்கு சரியான நேரத்தில் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அறிவித்திருந்தால் தான் நாட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குறிப்பாக கொழும்பு நகரம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதல் கடந்த ஏப்ரல் 21ம் திகதியே மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் இடம்பெற்ற வேளையில் நான் சிங்கப்பூரிலேயே இருந்தேன்.

இத்தகையதோர் தாக்குதல் இடம்பெறக்கூடும் என்ற தகவலை இந்திய அரசு இலங்கையின் அரச புலனாய்வுத் துறைக்கு அறிவித்திருக்கின்றது. அத்தகையதோர் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறும் அறிக்கையும் அனுப்பப்பட்டிருக்கின்றது.

ஏப்ரல் மாதம் 04ம் திகதியே இந்திய அரச தரப்பு இதனை அறிவித்திருக்கின்றது. அதன் பின்னர் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரிகளுக்கிடையில் அத்தகவல் பரிமாறப்பட்டிருக்கின்றன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையில் கடிதம் மூலம் இத்தகவல் பரிமாறப்பட்டிருக்கின்றது. நான் இலங்கையை விட்டு வெளியேறியது ஏப்ரல் மாதம் 16ம் திகதி.

ஏப்ரல் மாதம் 04ம் திகதி முதல் 16ம் திகதி வரை நான் இலங்கையில் இருந்த 12 நாட்களில் இத்தகவல் எமது பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருந்தன. இருந்தும் எந்தவொரு பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இத்தகையதோர் தகவல் கிடைத்திருப்பதாக எனக்கு அறியத்தரவில்லை.

அப்படி அறியத்தந்திருப்பின் நான் நாட்டைவிட்டு வெளியேறியிருக்க மாட்டேன். அத்தோடு தகவல் அறிந்திருப்பின் இத்தாக்குதலை தடுத்திருப்பேன். எமது பாதுகாப்பு துறை பிரதானிகள் ஒரு பாரிய தவறை புரிந்திருக்கின்றார்கள்.

ஆகையால் தான் பாதுகாப்பு செயலாளரையும், பொலிஸ்மா அதிபரையும் அப்பதவிகளிலிருந்து விலக்கினேன். அத்தோடு இச்சம்பவம் நடந்த விதத்தையும் எமது பாதுகாப்பு தரப்பின் ஏதேனும் குறைபாடுகள் இருந்திருப்பின் அவற்றைக் கண்டறிவதற்கும் உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை ஏப்ரல் 22ம் திகதியே நியமித்தேன்.

அவ்வறிக்கைக்கமைய தவறுகள் இழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகையதோர் தாக்குதலைப் பற்றி நான் அறிந்திருப்பின் இந்த உயிர்ச்சேதம் ஏற்பட நான் இடங்கொடுத்திருக்க மாட்டேன். பாதுகாப்பு துறைகளை சிறந்த முறையில் இயங்க வைத்திருப்பேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: