டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான பல தரப்பு அணுகுமுறைகளை வலுப்படுத்துவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 14th, 2021

டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை நிரந்தரமாக மேற்கொண்டு செல்வதற்கு அனைத்து நிறுவனத்திலும் அதற்கென ஒரு அலுவலரை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் தற்போது டெங்கு நோய் பிரதான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவாகியுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரைக்கும் 25,910 நோயாளர்களும், 19 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறு, மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ள டெங்கு நோய்ப் பரவல், பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் மேலும் அதிகரிக்கும் போக்குக் காணப்படுவதால், தொற்று நிலைமையைத் தடுப்பதற்கான குறித்த அனைத்துத் தரப்பினரின் பங்குபற்றலுடன் அமைச்சின் ஊடாக ஒன்றிணைந்த தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை நிரந்தரமாக மேற்கொண்டு செல்வதற்கு அனைத்து நிறுவனத்திலும் அதற்கென ஒரு அலுவலரை நியமித்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் விடயங்களை மீளாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பாக மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் பொறுப்புக்களை ஆளுநர்களுக்கு ஒப்படைத்தல், டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பாக தற்போது காணப்படும் சட்ட ஒழுங்குகளை இற்றைப்படுத்தல், டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பாக அனைத்துச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பு செய்வதற்கான பொறுப்பை தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு ஒப்படைத்தல் உள்ளிட்ட ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: