டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் காலடி எடுத்துவைக்கும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம்!
Sunday, January 1st, 2017
கடந்த ஆண்டின் மிகச் சிறந்த அரச நிறுவனமாக பரீட்சைத் திணைக்களத்தை நாடாளுமன்றத் தெரிவுக்குழு பெயரிட்டிருந்தது. இதனையடுத்து பரீட்சைத் திணைக்களத்தின் செயற்திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த கால பரீட்சை பெறுபேறுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளதாக பரீட்சை ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பணிப்புரைக்கு அமைய டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதற்காக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
உயர்தர மாணவர்களுக்கு இந்த ஆண்டு கைக்கணனிகள் வழங்கப்பட உள்ளதாகவும், இவற்றின் ஊடாக மாணவர்கள் மாதிரி வினாத்தாள்களுக்கு பதிலளித்து அவற்றை சரி பிழை பார்த்துக்கொள்ள முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சைத் திணைக்களத்தின் தகவல்களை நீண்ட காலத்திற்கு பாதுகாத்துக்கொள்ள டிஜிட்டல் மயப்படுத்தப்படுவது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பரீட்சைத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளது.

Related posts:
|
|
|


