ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு – தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் உறுதியளிப்பு!

Tuesday, September 19th, 2023

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தென்கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது, இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும், மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தென்கொரிய ஜனாதிபதி வரவேற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு தென்கொரியாவில் பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், காலநிலை மாற்றத்தை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இரு தலைவர்களும் விசேட அவதானம் செலுத்தியிருந்ததோடு, விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை கைசாத்திட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

தற்போதும் இலங்கையின் இளைஞர் யுவதிகள் பெருமளவில் தென்கொரியாவில் தொழில் புரிகின்றனர் என்பதோடு அந்தநாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றமைக்காக தென்கொரிய ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அனுசரணையில் ஆரம்பமான நிலையான அபிவிருத்திக்கான இரண்டு நாள் உச்சிமாநாட்டுக்கு புறம்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: