ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை – பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் புதிய முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க மாதாந்தம் மாநாடுகளை நடத்த முடிவு!
Friday, September 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள், மாதத்திற்கு ஒரு முறை மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் உயர்மட்ட முதலீட்டாளர்கள், தொழில்முயற்சியாளர்கள், வர்த்தக சமூகம் மற்றும் தொழில் வல்லுனர்களின் பங்குபற்றுதலுடன் புதிய முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதை இந்த சந்திப்புகள் நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டனில் இருக்கும் போது அங்கு வாழும் புலம்பெயர் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்த சந்திப்பு பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தொழில் முயற்சியை கட்டியெழுப்புவதற்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் நிதியை வழங்க தயாராக இருப்பதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் பொறியியலாளர் விஸ்வநாதன் நிமலன் தெரிவித்துள்ளார்.
விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, தகவல் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் புலம்பெயர்ந்தோரின் நிதியை முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இலங்கை எதிர்நோக்கும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க கைகொடுக்கும் ஒரு வழியாகும்.
இலண்டனில் நடைபெற்ற புலம்பெயர் மக்களுடனான சந்திப்பின் பின்னர், எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்து, கனடா, பிரான்ஸ், நோர்வே, ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் இலங்கைக்கு ஆதரவாக சந்திப்புகள் நடத்தப்படும் என்றும் நிமலன் தெரிவித்தார்.
தற்போது இலங்கைக்கு வெளியே இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


