ஜனாதிபதி மாளிகையில் உள்ள தொல்லியல் சின்னங்களை திருடினால், சேதப்படுத்தினால் சட்டநடவடிக்கை – தொல்லியல் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, July 13th, 2022

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களைத் திருடினாலோ அவற்றுக்கு சேதம் விளைவித்தாலோ, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதன் பின்னரான நிலை என்பவற்றால், கொழும்பு ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் சின்னங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள் சேதமாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

இதற்கமைய, அங்குள்ள தொல்லியல் மதிப்புமிக்க சின்னங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை முதலான இடங்கள் இன்றைய தினம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் பொறுப்பும், கடமையுமாகும் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பட்டத்தின் பின்னர் கொழும்பு ௲கோட்டை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று குறித்த பணிகளை முன்னெடுத்திருந்தது.

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்கவும் பிரசன்னமாகியிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் கடந்த 9 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தனர்.

இதனையடுத்து அனைத்து காவல்துறை தடுப்புகளையும் மீறி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை என்பனவற்றை அவர்கள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: