ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு – 100 சந்தேக நபர்கள் அடையாளம் – மூன்று சந்தேக நபர்கள் வெலிக்கடை பொலிசாரால் கைது!

Monday, July 25th, 2022

இலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த கொடிகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தக் கொடிகள் பழங்கால மதிப்பு மிக்கவை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்கால சந்ததியினர் இந்த கொடிகளை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டை ஆண்ட ஒவ்வொரு ஜனாதிபதியும் இந்த வரலாற்று பெறுமதி மிக்க கொடிகளையும் அங்கிருந்த தொல்பொருட்களையும் பாதுகாத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டவர்களும் அதனை பார்வையிட வந்தவர்களும் இந்த கொடிகளையும், மிகவும் பழமையான கலைப்பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன கொடிகள் மற்றும் தொல்பொருட்களைக் கண்டறியும் வகையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்பட்ட சேதம் மிகப் பெரியது எனவும், அதற்கான மதிப்பீட்டு அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் போன்றவற்றை சேதப்படுத்தி, குறித்த இடங்களில் பொருட்களை திருடிய சுமார் 100 பேரை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய பொலிஸ் குழுக்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் தகவல்களை தற்போது புலனாய்வு அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் உண்மைகள் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை பொலிஸ் குற்றவியல் ஆய்வுக்கூடம், குற்ற அறிக்கைகள் பிரிவு மற்றும் கைரேகை பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு சேத விபரம் மற்றும் ஏனைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதன் காரணமாக மேல் தளத்திற்கு செல்லும் படிகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்லியல் மதிப்புமிக்க படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளமை காரணமாக அவற்றினை தொல்லியல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அங்குள்ள தொல்லியல் பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் கணக்கிட முடியாதவை என தொல்பொருள் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மாளிகையின் படிக்கட்டுகளை புனரமைக்க பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பல பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்களை வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தபோது, சந்தேக நபர்கள் ஜன்னல் திரைச்சீலைகளைத் தொங்கவிட சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க நிற பித்தளைப் பந்துகளைத் திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பழைய பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதி மாளிகையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

000

Related posts: