ஜனாதிபதியால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!

Monday, May 13th, 2019

நாட்டில் தற்போது பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைப்போன்று தோற்றத்தை சித்தரிப்பதற்கு சிலர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அதன் காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பயங்கரவாத சம்பவம் ஒரு புறமிருக்க சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை உருவாக்குவதற்கு சிலர் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் இனங்களுக்கிடையே இருக்க வேண்டிய நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் உறுதிப்படுத்தி, அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஆற்றுவதற்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களுக்கு அகப்படாமல் அன்றாட வாழ்க்கையை சுமுகமான முறையில் நடாத்தி செல்வதற்கு சமுதாயத்தை அறிவூட்டுவதற்கு மதத் தலைவர்கள், பிரதேச அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

Related posts: