செயலிழந்த நுரைச்சோலை மின் நிலையம் இம்மாத இறுதிக்குள் வழமைக்கு திரும்பும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Wednesday, January 26th, 2022

தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவோட் அளவிலான மின்சாரத்தை இணைக்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய 300 மெகாவோட் மின்சார உற்பத்திக்கான இயந்திரம் எதிர்வரும் 29 அல்லது 30 ஆம் திகதிகளில் மீண்டும் செயற்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் அதன் திருத்தப்பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளரும், மேலதிக பொது முகாமையாளருமான அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்வரும் நாட்களில் மின்சாரத்திற்கான அதிகளவில் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில், 30 சதவீதம் நீர் மின் உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் மீள வழமைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலை எண்ணெய் இன்மையால் சப்புகஸ்கந்தை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளன.

அதற்குரிய உலை எண்ணெய்யை வழங்குவதற்காக எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடப்பட்டிருந்த நிலையில், அந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: