செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!.

Monday, December 11th, 2023

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இது நாட்டின் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டில் டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான நிறுவன கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான துறையினூடாக இலங்கைக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தரவின் நினைவு தின விழாவை முன்னிட்டு நேற்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

காலநிலை மாற்றம் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம். அதன்படி, இரண்டு பாரிய முதலீடுகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தி, அனல் மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் முன்னேறும் திறன் நம்மிடம் உள்ளது. ஆனால், நிலக்கரியை கொண்டு வரவும் அனல் மின் நிலையங்களை நிர்மாணிக்கவும் இன்றும் பலர் பழகியுள்ளனர்.. இதை நிறுத்துவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஏனென்றால் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரத்தில் லஞ்சம் பெற முடியாது. ஆனால் இந்த பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு தடைகள் ஏற்படலாம்.

பசுமை பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். தென்னிந்தியாவின் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் பெங்களூர் என்பன பெரிய டிஜிட்டல் பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. அதை நம் நாட்டிற்கு கொண்டு வருவது அவசியம், எனவே பல புதிய நிறுவனங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.

அதன் மூலம், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல டிஜிட்டல் முகவர்நிலையத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக, AI மையம் உருவாக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் தேவையான சட்டங்களை நிறைவேற்றிய பிறகு, புதிய அறிவியல் பொருளாதாரத்தையும் பசுமைப் பொருளாதாரத்தையும் உருவாக்க தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: