செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை!

Monday, May 1st, 2023

நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளில் மேலும் அபிவிருத்திக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு ஜனாதிபதி கொண்டு வந்தார்.

தற்போது இலங்கையில் கணனி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் மொத்த தேசிய வருமானத்தில் வருடாந்த பங்களிப்பு சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இதில் செயற்கை நுண்ணறிவு ( AI ) தொழில்நுட்பம் மூலம் ஈட்டப்படும் வருமானம் எவ்வளவு என அறியப்படவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அந்த தொகையை கண்டறிவதற்கான முறைமை ஒன்றை தயாரிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படும் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: