சுற்றுலாத்துறையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு -ஜோன் அமரதுங்க!

Saturday, March 4th, 2017

போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளை ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஏனையோரை கவர்ச்சிகரமான ஊதியம் பெறும் சுற்றுலாத்துறைக்கு வருமாறும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அழைப்பு விடுத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூரில் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பொழுது போக்குப் பூங்கா திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் இறுதியில் போராட்டம் நடாத்தி வரும் பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு பட்டதாரிகளிடம் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக பட்டதாரிகளின் விடயம் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது அதற்குத் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாகாண சபைக்கு அதற்குரிய நிதி விடுவிப்புக்கான கூட்டம் ஒரு சில நாட்களில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கில் இளைஞர் யுவதிகள் அனுபவிக்கும் வேலையில்லாப் பிரச்சினைகளைப் பற்றி எமது கவனத்திற்கு விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல ஆசிரிய மற்றும் அதிபர் வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்புமாறு பணிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கத்தின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, தேசிய கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுனர் செயலாளர், தலைமை செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கிழக்கு மாகாண வளங்களைப் பயன்படுத்தி கிழக்கு மகாண இளைஞர் யுவதிகள் சுற்றுலாத்துறையில் கவர்ச்சிகரமான வருமானம் ஈட்டிக் கொள்ளும் தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியும். அதுபற்றியும் நீங்கள் ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். எனவும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

jhon-amarathunga-720x480

Related posts: