சுற்றுச்சூழல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

Saturday, May 25th, 2019

சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு குறித்த நடவடிக்கைகளை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.

சுற்றாடல் அதிகார சபையினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் கவனஞ்செலுத்தினார்.

சுற்றாடல் வழிகாட்டி செயற்திட்டத்தை தாமதமின்றி நிறைவு செய்தல், பாடசாலை மட்டத்திலான சுற்றாடல் வழிகாட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இதனோடு தொடர்புடைய சகல தரப்பினரையும் இணைத்து சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான ஈடுபாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொலித்தீன் தடை, வாகனங்களில் அதிக ஒலியை எழுப்புவதை தடை செய்தல், சுற்றாடல் பொலிஸாரை பலப்படுத்துதல் போன்ற சுற்றாடல் பாதுகாப்பிற்காக அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்பாக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

Related posts: