சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே எரிபொருட்களின் விலை அதிகரிப்பு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, June 14th, 2021

எரிபொருட்களின் பொருட்களின் விலை அதிகரிப்பானது சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இது, நாட்டின் வங்கி முறைமையைப் பலப்படுத்தி குறைந்த வட்டி வீதத்தைப் பேணுவதற்கும், அந்நியச் செலாவணியைக் குறைத்து, செலாவணி வீதத்தைப் பலப்படுத்தவும், மக்களின் சுகாதார நலன் பேணலைப் பாதுகாக்கவும், இறக்குமதியின் மீது தங்கி இருக்கும் நுகர்வுப் பொருளாதாரத்தை தேசிய உற்பத்தியின் மீது தங்கியிருக்கும் முதலீட்டு நுகர்வுப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தீர்மானமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்த பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களோடும் வாழ்க்கைச் செலவு ஜனாதிபதி செயலணியினரோடும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது.  இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

தற்போது மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதுடன், அது மேலும் அதிகரிக்கக்கூடுமென சந்தை போக்குகளின் மூலம் தெரியவருகின்றது.

இலங்கையானது, எரிபொருள் இறக்குமதிக்காக பெருமளவு அந்நியச் செலாவணியைச் செலவிடும் ஒரு நாடு மட்டுமன்றி, அந்த இறக்குமதியிலேயே, நாட்டின் போக்குவரத்துச் சேவைகள், மின்சார உற்பத்தி என்பனவும் தங்கியுள்ளன.

இந்தச் செலவு, மொத்த அந்நியச் செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் விதைகள், உரம், உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை இறக்குமதி செய்யும் இந்த இறக்குமதி சார்ந்த நுகர்வு முறைமை, உற்பத்தி சார்ந்த நுகர்வு முறைமைக்கு மாற்றப்பட வேண்டும். அதை நோக்கியே எனது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அந்நியச் செலாவணியை செலவிடுவதற்கு மேலதிகமாக, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனமாக இருக்கின்ற காரணத்தினால், ஒவ்வொரு வருடமும் இலங்கை வங்கியிலும் மக்கள் வங்கியிலும் கடனில் தங்கியிருக்கும் நிறுவனமாகவே அது இருந்துவருகின்றது.

அத்துடன் எரிபொருள்களால் இயங்கும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டு, மின்சாரக் கார் பாவனை ஊக்குவிக்கப்பட்டு, முச்சக்கர வண்டிகளுக்கும் மின்சார என்ஜின்களை வழங்குவதன் மூலம், போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், நகரப் பிரதேசங்களின் வளி மாசடைவதுடன், மக்கள் மத்தியில் சுவாச நோய்களும் அதிகரித்து வரும் நிலையில், சூழல்நேய வலுச்சக்தி மூலங்களுக்கு விரைவாகச் செல்லவேண்டியது கட்டாயமாகியுள்ளது.

அதேநேரம் காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்ப – உரம், எரிபொருள், வன வளங்கள், திண்மக் கழிவுகள் போன்றன மக்கள் வாழ்வுக்கு உகந்த வகையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும்.

அந்த வகையில் – விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களின் மீது தங்கியிருக்கும் நுகர்வு முறைமையை மாற்றுவதற்கு, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பல முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் மின்சார உற்பத்திக்காக, சுமார் 30 சதவீதமான எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், அதனைத் தவிர்ப்பதற்கு மீள்பிறப்பாக்கச் சக்தி வலு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக, அனைத்து வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச கட்டிடங்களுக்கு, சூரிய சக்தி மின் உற்பத்தித் தொகுதிகளை வழங்குவதன் மூலம், மக்கள் மீது சுமத்தப்படும் அதிக விலை அழுத்தங்களைக் குறைப்பது மட்டுமன்றி, அந்த மின் அலகுகளை மின்சார சபைக்கு வழங்கி, வருமானம் ஈட்டவும் முடியும்.

எனவே இதனை எமது நாட்டின் குடிமக்கள் தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விவசாய, கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி - கமநல காப்புறுதி சபை...
நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை - கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜன...
செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளைமறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடிய...