சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் கையளிப்பு!

Monday, October 23rd, 2017

மணியம் தோட்ட பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

குறித்த இளைஞரின் சடலம் இன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து பொலிஸாரினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் நேற்று பிற்பகல் துப்பாக்கி சூட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 25 வயதுடைய டொன் போஸ்கோ ரிஸ்மன் என்ற இளைஞர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கி குண்டானது அவரது நெஞ்சு பகுதியூடாக சுவாசப்பை பகுதியை துளைத்து சென்ற நிலையில் சுவாசப்பையில் ஏற்பட்ட இரத்தப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, இளைஞரின் மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts: