சீனா அளித்து வரும் கடன்கள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் – அமெரிக்கா கவலை!

Saturday, February 25th, 2023

இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அளித்து வரும் கடன்கள், வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆழ்ந்த கவலை தமக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலர் டொனால்ட் லூ, இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனின் இந்திய பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இராஜாங்க செயலாளர், எதிர்வரும் மார்ச் 1 முதல் 3 வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு செல்கிறார்.

இந்தநிலையில் இந்தியாவை உள்ளடக்கிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள், தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க, எந்தவொரு வெளி பங்காளியாலும் நிர்பந்திக்கப்படக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்துவதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார், சீன மேம்பாட்டு வங்கியின் சபை, தமது நாட்டிற்கு 700 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்த நிலையிலேயே அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் ஜி 20 நிதி அமைச்சர்கள் கூட்டத்துக்கு அமைவாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே தூதுவர் மட்டத்திலான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன்போது, கடன் நெருக்கடி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இதற்கிடையில், இலங்கை உள்ளிட்ட குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்கும் சீனாவின் பின்தங்கிய கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக வங்கியின் பிரதித் தலைவர் ஒருவர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறப்படும் வரை நாட்டின் சுகாதார சேவையை உகந்த மட்டத்தில் பேணுவதற்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவைப் பற்றி அறிந்து கொள்வதே அவரது விஜயத்தின் நோக்கமாகும் என்று ஆரம்ப சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: