சீனவின் சினோபார்ம் தடுப்பூசி குறித்து அச்சமடைய தேவையில்லை – பல நாடுகளிலும் பாவனையிலுள்ளது என்கிறார் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர்!

Friday, April 2nd, 2021

சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தடுப்பூசியானது பல்வேறு நாடுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரமே இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களின் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் சீனாவால் வழங்கப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். சினோபார்ம் முதலாவது தடுப்பூசியானது வழங்கப்பட்ட மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கர்ப்பிணித் தாய்மார்கள், 18 வயதுக்கும் குறைவானவர்கள் மற்றும் சில வகை நோய் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க முடியாது. சிலர் சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் அச்சம் கொண்டிருக்கக் கூடும். குறிப்பாக இந்த தடுப்பூசி எமது நாட்டில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் அவ்வாறு இல்லை, சினோபார்ம் தடுப்பூசியானது பல்வேறு நாடுகளில் வழங்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான தரவுகளின் அடிப்படையில்தான் எமது நாட்டில் அவசரகால பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை முதல் டோஸ் ஆக 9 இலட்சத்து 19 ஆயிரத்து 753 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் இரண்டாவது தடுப்பூசியை வழங்கும் செயற்பாடும் எதிர்காலத்தில் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் - கொரோனா தொற்று ஆய்வில் தகவல்!
கொராரோனா வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அற...
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரம் - பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!