சிறையிலுள்ள மகனைப் பார்க்கச் சென்ற தாய் கைது – யாழில் சம்பவம்!

Thursday, March 28th, 2019

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு மிகவும் நுட்பமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் மகனுக்கு வழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து போதைப்பொருள் கொண்டு சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீதிமன்றின் உத்தரவில், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சைக்கிள் திருட்டுக் குற்றச்சாட்டு வழக்குகள் பல நிலுவையிலுள்ளன.

சந்தேகநபரை பார்வையிடச் சென்ற அவரது தாயார், புகையிலை நறுக்குக்குள் சிறியளவு ஹெரோயின் போதைப் பொருளைச் சுற்றி அதனை வாழைப்பழத்துக்குள் நுட்பமாகச் செலுத்தி எடுத்துச் சென்றுள்ளார். வாழைப்பழத்தை சோதனை செய்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் சுற்றப்பட்ட புகையிலை நறுக்கை மீட்டுள்ளனர்..

அதனால் சந்தேகநபரின் தாயாரைக் கைது செய்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், அவரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் விசாரணைகளின் பின்னர், வயோதிப் பெண்ணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்படுத்தினர்.

“மகனை நல்வழிப்படுத்துவதற்கு முன்மாதியாக இருக்க வேண்டிய தாய் இவ்வாறு நடந்துகொள்ளலாமா? போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு மீளவும் போதைப்பொருளை எடுத்துச் சென்று வழங்குவது மகனை குற்றம் செய்யத் தூண்டுவதாகவே உள்ளது” என்று எச்சரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரான வயோதிப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts: