சிறைச்சாலைகள் சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியொருவரை நியமிக்க நடவடிக்கை!

Wednesday, September 22nd, 2021

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் பதிவான இராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயற்பாடு தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீதியமைச்சர் என்ற வகையில் தான் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

இனி இதுபோன்றதொரு சம்பவம் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது என்றும் இது பெரும் அவமானம் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடமும், அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் நீதியமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இது குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த சம்பவத்திற்கு அரசியல், இன, மத சாயத்தை பூச வேண்டாம் என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி கோரியுள்ளார்.

அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாகக் குற்றம்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்தே விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: