சிறு வியாபாரிகளின் பிரச்சினைகளை நீக்கி மீண்டும் 15 வீத வற் வரி!

Thursday, August 11th, 2016

சிறு வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு ‘வற்’ வரி சட்ட மூலத்தில் மீண்டும் திருத்தங்கள் செய்து அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன நேற்று (10) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அரசாங்கம் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ள 15 சதவீத ‘வற்’ வரியில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாதென சுட்டிக்காட்டிய அமைச்சர், சில்லறை வியாபாரிகள் ‘வற்’ வரியினை இலகுவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவே இத்திருத்தம் அமையுமெனவும் கூறினார்.

சில்லறை வியாபாரிகள் ‘வற்’ வரியை செலுத்துவதனால் தாம் எதிர்நோக்க கூடிய அசௌகரியங்கள் குறித்து இரண்டு தடவைகள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தினர். இதனையடுத்து சகல தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் இச்சட்ட மூலத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொண்டதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் சேனாரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை சில்லறை வியாபாரிகளிடமிருந்து கிடைக்கக் கூடிய ‘வற்’ வரி வருமானத்தை ஈடு செய்யக் கூடிய வகையில் 18 மில்லியன் ரூபாவை இலக்கு வைத்து புகையிலைக்குரிய வரியை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தானும் ஜனாதிபதியும் இணைந்து அமைச்சரவைக்கு நேற்று சமர்பித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts: