சிறிய வெங்காயச் செய்கைக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Thursday, December 27th, 2018

யாழ்ப்பாணத்தில் பெரிய வெங்காயச் செய்கையில் எவரும் ஈடுபடாதபோதும் இலவசக் காப்புறுதி உண்டு. ஆனால் அதிகளவான விவசாயிகள் சிறிய வெங்காயச் செய்கையில் ஈடுபடுகின்றனரெனினும் இலவசக் காப்புறுதி கிடைப்பதில்லை என்று யாழ்ப்பாண மாவட்ட விவசாய சம்மேளத் தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் முதன்முதலாக இந்த வருடம் 40 ஏக்கர் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இலவசக் காப்புறுதி வழங்கும் விவசாய அமைச்சு, யாழ்ப்பாணத்தில் இத்தனை வருடங்களாகச் சிறிய வெங்காயச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்குக் காப்புறுதி வழங்க மறுக்கின்றது.

யாழ் குடாநாட்டில் மட்டும் வருடாந்தம் ஆயிரத்து 200 தொடக்கம் ஆயிரத்து 450 ஏக்கர் நிலத்தில் சிறிய வெங்காயச் செய்கை இடம்பெறுகிறது. அவை அழிவடைந்தால் எந்தக் காப்புறுதியும் கிடையாது.

சிறிய வெங்காயத்தை பாத்தியில் நட்டால் காப்புறுதி கிடையாது. வரம்பு கட்டி நட்டால் மட்டுமே வழங்க முடியும். ஆனால் ஆயிரம் கண்டுகளுக்கு ஆயிரத்து 200 ரூபா செலுத்த வேண்டும் என்று கமநல காப்புறுதி உதவி ஆணையாளர் தெரிவிக்கிறார்.

யாழ்ப்பாண மாவட்ட புவியியல் தன்மையில் எல்லாப் பகுதிகளிலும் வரம்பு கட்டிச் செய்கையில் ஈடுபடமுடியாது. வெள்ளம் தேங்கும் பகுதிகளில் மட்டுமே அவ்வாறு நடமுடியும் என ஏற்கனவே விவசாயிகள் கூறியிருக்கின்றனர். இதுதொடர்பில் கவனமெடுத்து காப்புறுதி வழங்க வேண்டும். பெரிய வெங்காயத்துக்கு வழங்கப்படும் காப்புறுதியை இங்குள்ள விவசாயிகளுக்கும் பெற்றுக்கொடுக்க கமநல காப்புறுதி ஆணையாளர் விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் ஆயிரம் கண்டுகளுக்கு ஆயிரத்து 200 ரூபா என்பது ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாவைத்  தொட்டுவிடும். இது அதிக பணச் செலவை ஏற்படுத்தும் என்று மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

Related posts: