சலுகைகளை நுகர்வோருக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!
Saturday, July 20th, 2024
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் சட்டத்தைத் திருத்துவதற்கான உரிய பரிந்துரைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த நெருக்கடி நிலைமை தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
வட்டியைக் குறைக்கும் நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்குத் தேவையான கொள்கை ரீதியிலான முடிவுகளை மத்திய வங்கி எட்டியுள்ளது.
இதன்படி அடுத்த சில மாதங்களில் மக்களுக்கு மேலும் பல்வேறு நிவாரணங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நுகர்வோர் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் நுகர்வோர் மற்றும் வர்த்தகர் இடையே உள்ள புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
அதேநேரம் அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோரைச் சென்றடையாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் வர்த்தக சங்கங்களுடன் இதுகுறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


