சர்வதேச அடிப்படைகள் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை!

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை மீண்டும் வழங்குவதா? இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 2017 ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு சர்வதேச தரத்திலான சட்டமொன்றைக் கொண்டுவருதல் உள்ளிட்ட அடிப்படைகள் நிறைவேற்றப்படும் பட்சத்திலேயே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முன்னேற்றகரமான மாற்றங்களைக் காணக்கூடியதாக இருப்பதாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு தலைமைதாங்கிய ஜீன் லம்பெர்ட் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் நேற்று(01) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர். தமது விஜயத்தின் போது கலந்துரையாடப்படும் விடயங்கள் மற்றும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக அவதானிக்கப்படும் விடயங்கள் குறித்து அவர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்திருந்தனர்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு இலங்கை அரசாங்கம் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் பாராளுமன்றக் குழுவின் ஆய்வு அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்குப் பின்னர் குறித்த வரிச்சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்படுமா? இல்லையா என்பது தொடர்பில் ஆரம்ப சமிக்ஞைகள் தென்படும்.
மே மாதம் 12ஆம் திகதி இச்சலுகையை வழங்குவதா?இல்லையா என ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானிக்கும் என நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டொங் லாய் மார்க் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களின் பின்னரான மாற்றங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிவில் அமைப்புக்களும் அரசியல் தரப்புக்களும் கூறுகின்றன. எனினும், உண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மக்கள் உணரக்கூடியதாக இருக்கவேண்டும். ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு 27 சர்வதேச சமவாயங்களை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு சர்வதேச தரத்திலான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழுவுக்குத் தலைமைவகித்த ஜீன் லம்பெர்ட் கூறினார்.
ஜீ.எஸ்.பி சலுகை குறித்து தொடர்சியான பரந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் முன்னேற்றம் காணப்படுகிறது. இருந்தபோதும் இலங்கையின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்த பின்னரே அது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு விடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைத்திருக்கும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுடன், நல்லிணக்க செயற்பாடுகள் சரியான பாதையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|