சங்கானை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நோயாளர்கள் பெரும் அவதி!

Friday, December 22nd, 2017

சங்கானை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமையால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

சங்கானை மருத்துவமனையில் நாளாந்தம் ஏராளமான நோயாளர்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். எனினும் அங்கு நான்கு மருத்துவர்களே கடமையில் உள்ளனர். இதனால் நோயாளர்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே இங்கு மேலும் புதிதாக மருத்துவர்களை  நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இததொடர்பில் சங்கானை மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது இது “ஏ” தரம் வாய்ந்த மருத்துவமனையாகும். பொதுவாக இந்தத்தரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் 9 மருத்துவர்கள் கடமையில் இருக்கவேண்டும். ஆனால் இங்கு 5 பேரே கடமையில் உள்ளனர். இவர்களிலும் ஒருவர் விடுமுறையில் சென்றுவிட்டார்.

தற்போது இருக்கின்ற நான்கு பேரே கடமையில் உள்ளனர். எமது மருத்துவமனைக்கு மொத்தமாக நூறு பணியாளர்கள் இருக்கவேண்டும். ஆனால் 50 பேரே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாவட்டங்களில் அனைத்து வசதிகளும் தேவைகளும் பூர்த்தியாக்கப்படுகின்றன. ஆனால் எமது மாவட்டத்தில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.

எமது மருத்துவமனையில் பரிசோதனைக்கூடம் இருக்கின்றது. அதற்கான ஆளணி இல்லை. பரிசோதனைகளை வெளியிலேயே செய்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது – என்றார்.

Related posts: