கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் எதிர்வரும் 04 ஆம் திகதி வர்த்தகர்களுடனான இறுதிக் கலந்துரையாடல் !

Saturday, September 2nd, 2023

கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் வர்த்தகர்களுடனான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி கிலோ ஒன்றினை 850 ரூபாவிற்கு நுகர்வோருக்கு வழங்க முடியுமெனவும், வர்த்தகர்கள் குறித்த சலுகையினை மக்களுக்கு வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட தொகையினை மீளாய்வு செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சுகாதார மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனிடையே, கோழி இறைச்சி கிலோ ஒன்றினை 1,250 ரூபாவிற்கு இன்றுமுதல் விற்பனை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சோள இறக்குமதியை அனுமதிப்பதாகவும், அதற்கு விதிக்கப்பட்ட வரியை குறைப்பதாகவும் விவசாய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்காசோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதுடன், அதனை இறக்குமதி செய்வதற்கு மூன்று வாரங்கள் தேவைப்படும் எனவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தாம் உறுதியளித்தற்கு அமைய கோழி இறைச்சி கிலோ ஒன்றினை இன்றுமுதல் சந்தையில் 1250 ரூபாவிற்கு வழங்க முடியுமென தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலையினை 100 ரூபாவினால் குறைப்பதற்கு கோழிப்பண்ணை தொழிற்துறையினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: