கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு ரூ.470 இலட்சம் செலவில் புதிய விடுதி!

Thursday, August 9th, 2018

கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் மாணவர் விடுதி 470 இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

சமையல் கூடம் மற்றும் வசதிகளுடன் கூடியதான மூன்று மாடிகளைக் கொண்டதாக மாணவர்களுக்கான விடுதி அமைக்கப்படவுள்ளது.புதிய விடுதி கட்டுமானத்துக்கான நிதி ஒதுக்கீட்டை கல்வி அமைச்சு செய்துள்ளது.

இராணுவ நடவடிக்கை மற்றும் 1995 ஆம் ஆண்டு வலிகாமம் இடப்பெயர்வுக்குப் பின்னர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை மாணவர் விடுதி பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது. கடந்த 22 வருடங்களுக்கு மேல் விடுதி பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்கள் ஆசிரிய கலாசாலைக்கு அயலில் தனியார் வீடுகள் மற்றும் தங்குமிடங்களில் வாடகை செலுத்தியே தங்கியிருந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்று அதன் பின்னர் இரண்டு வருட கால ஆசிரிய பயிற்சியை மேற்கொண்டு வரும் ஆசிரிய மாணவர்களுக்கு  தமக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புக் கொடுப்பனவில் கணிசமான தொகையை தங்குமிடத்துக்காகச் செலவு செய்து வருகின்றனர்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு வருகை தரும் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், மாணவர் விடுதி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறி வந்த போதிலும் நிறைவு செய்யப்படாத வாக்குறுதியாகவே இருந்து வந்தன.

எனினும் ஆசிரியர் கலாசாலையை அரசு பொறுப்பேற்ற பின்னர் முதற்தடவையாக அரசினால் மாணவர் விடுதிக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.

Related posts: