கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் – உலக நாடுகளுக்கு சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தல்!

Tuesday, March 16th, 2021

கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

சில ஐரோப்பிய நாடுகள் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தும் பணிகளை இடைநிறுத்தியுள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அத்துடன் தடுப்பூசி செலுத்தலுக்கும் இரத்த உறைதல் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் சிறிய நாடுகளுடன் இணைந்து தடுப்பூசியை இடைநிறுத்துவது தொடர்பில் ஆராய்வதாக தெரியவருகின்றது.

இந்தநிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி பாதுகாப்பு நிபுணர்கள் இன்று கூடி கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய மருத்துவ நிறுவகமும் இன்றைய தினம் கூடவுள்ளதோடு எதிர்வரும் வியாழக்கிழமை அதன் இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் அந்த நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

சில ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் செலுத்தப்படுவதனால் இரத்த உறைதல் சம்பவங்கள் பதிவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வழமையாக பதிவாகும் எண்ணிக்கையை விடவும் குறைவானோருக்கே இரத்த உறைதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவில் இதுவரையில் 17 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் 40 க்கும் குறைவானோருக்கு இரத்த உறைதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

அபிவிருத்தி பணிகளுக்கு அக்கறை காட்டாத அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதானிகளுக்கு ஜனாதிபதி விட...
எரிபொருள் இல்லையென்கிறார்கள் - ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன - அமைச்சர் காஞ்சன வி...
யாழ்.போதனா வைத்தியசாலையின் அசமந்தம் – அகற்றப்பட்டது சிறுமியின் கை – தவறுக்கு கவலை தெரிவித்த பணிப்பாள...