கொடிகாமம் – பருத்தித்துறை வீதி எப்போது காப்பெற் வீதியாகும்? – மக்கள் கோரிக்கை!

Saturday, June 9th, 2018

பொதுமக்களின் அசௌகரியமான போக்குவரத்திற்கு வீதிகளின் தரம் மிக முக்கியமானவையாகும். அந்த வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கொடிகாமம் – பருத்தித்துறை வீதியானது பல வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் எற்றம் இறக்கமாகவும் காணப்படுகின்றது.

அதிகளவான பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் இவ் வீதியையே அதிகமாகப் பயன்படுத்துகின்றார்கள். வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்கு பயணிப்பதற்கான பிரதான வீதி மார்க்கமாகவும் இவ் வீதி காணப்படுகின்றது.

அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் இவ் வீதியினூடாக தினமும் பயணிக்கின்றனர். அதேபோல பெருமளவிலான வாகனங்களும் இவ் வீதியூடாகவே தினமும் பயணிக்கின்றன. இந்த வீதியை காப்பெற் வீதியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு கடந்த வருடம் அளவீட்டு பணிகள் இடம்பெற்று வீதியை அகலிப்பதற்கான குறியீடுகளும் இடப்பட்டு இருமருங்கிலும் கம்புகளும் நாட்டப்பட்டுள்ளன. இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடமாகின்ற போதிலும் இதுவரைக்கும் காப்பெற் வீதியாக மாற்றுவதற்கான எந்தவிதமான ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ் வீதி மோசமாகக் காணப்படுவதால் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நோயாளர்கள் இவ் வீதியால் வாகனத்தில் பயணித்தால் நோய் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமும் மக்களிடத்தில் காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் அடிக்கடி பழுதடைகின்றன. காரணம் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாலாகும்.

மேலும் அடிக்கடி வீதி விபத்துக்களும் இடம்பெறுகின்றன. வரணி வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றுக்கு நோயாளர்களை அழைத்துச் செல்லும் பிரதான வீதியாகவும் காணப்படுகின்றது.

மேலும் வரணி மத்திய கல்லூரி, பொதுச் சந்தை, நூலகம், தபாலகம், சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம், வரணி பிரதேச வைத்தியசாலை, சமுர்த்தி வங்கி போன்றனவும் இவ் வீதியிலேயே அமைந்துள்ளன. ஆகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இவ் வீதியை காப்பெற் வீதியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை விரைவாக மேற்கொண்டு மக்களின் அசௌகரியமான போக்குவரத்திற்கு உதவ வேண்டும் என அரசியல்வாதிகள், உரிய அதிகாரிகளிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts: