குடிநீர் போத்தலில் மோசடி – 8,190 குடிதண்ணீர்ப் போத்தல்கள் அழிப்பு!

Wednesday, November 28th, 2018

குடிதண்ணீர்ப் போத்தல்களில் இருந்த நுகர்வோருக்கான குறிப்பு மாற்றப்பட்ட 8 ஆயிரத்து 190 குடிதண்ணீர்ப் போத்தல்களை அழிக்குமாறு உத்தரவிட்டது யாழ்ப்பாண நீதிமன்றம். உற்பத்தியாளருக்கும் விநியோகத்தருக்கும் தலா 2 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன், யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் கே.கே.எஸ் வீதியிலுள்ள குடிதண்ணீர்ப் போத்தல் விற்பனை நிலையத்தை அண்மையில் சோதனைக்கு உட்படுத்தியபோது சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட பதிவிலக்கம் மாற்றப்பட்டு வேறு பதிவிலக்கம் போத்தல்களில் பொறிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரத்து 190 குடிதண்ணீர்ப் போத்தல்களை கைப்பற்றிய சுகாதாரப் பரிசோதகர் உற்பத்தியாளருக்கும் விநியோகத்தருக்கும் எதிராக யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. உற்பத்தியாளரும் விநியோகத்தரும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து அவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த நீதிவான் 8 ஆயிரத்து 190 குடிதண்ணீர்ப் போத்தல்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டார். அவற்றின் பெறுமதி சுமார் 2 லட்சத்துக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: