குடாநாட்டில் பொலிஸாருக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்!

Friday, July 15th, 2016

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்திற்கு பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவே பெரும்பாலான முறைப்பாடுகள் பதியப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து காணிப் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் கல்வித் திணைக்களத்திற்கும் கல்வி உயர் அதிகாரிகளுக்கும் எதிராக அதிகளவிலான முறைப்பாடுகள் யாழ் மாவட்டத்திலிருந்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கின்ற கனகராஜ் இத்தகைய முறைப்பாடுகள் சம்பந்தமாக தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் – இலங்கை மனித உரிமை ஆனைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு கிடைக்கின்ற பெரும்பாலான முறைப்பாடுகளில் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிரான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்கப் பெறுகின்றன. அதாவது பொது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படாமை, பொலிஸாரால் பொது மக்கள் அச்சுறுத்தப்படுகின்ற தன்மை, பொலிஸ் நிலையங்களில் மொழி உரிமை மீறப்படுகின்றமை என இவ்வாறு பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்ததாக கல்வித் திணைக்களத்திற்கு எதிராகவே அதிகளவிலான முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடமிருந்தே அதிகளவில் இத்தகைய முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன.

திணைக்களத் தலைவர்கள், மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. அதாவது உள்ளுராட்சி மன்றங்களின் நியமனங்கள், கட்டிட அனுமதிகள் என்பன தொடர்பிலே உள்ளுராட்சி மன்றங்களிற்கு எதிரான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் காணிப் பிரச்சனைகள் தொடர்பிலே அதிகளவிலான முறைப்பாடுகள். மனித உரிமை ஆனைக்குழவிற்கு கிடைக்கின்றன. அதாவது அரச காணிகளைப் பங்கீடு செய்வது தொடர்பிலே இத்தகைய முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன அதாவது காணிப் பங்கீட்டில் சம உரிமை அடிப்படையில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

காணி உள்ளவர்களுக்கே காணி வழங்கப்படுகின்றது, தொடர்ச்சியாக குடியமர்ந்திருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு தற்பொது ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் என்பன தொடர்பிலே குற்றச்சாட்டக்கள் முன்வைக்கப்பட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. காணிகள் பங்கீடு தான் அங்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதுகுறித்து தான் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படுகின்றன. அத்தோடு ஏனைய சில சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இந் நிலையில் இவ்வாறு எமக்கு கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் நாம் உரிய விசாரணைகளையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: