கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்குசந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை – கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, October 6th, 2023

கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தானிய இறக்குமதிக்காக அரசாங்கம் செலவழிக்கும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமிய பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு குறிப்பாக உழுந்து, பயறு ஆகிய தானிய வகைகளை பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 950 மெட்ரிக் டன் பயறு விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

இதனால் பயறு இறக்குமதிக்கு செலவிடும் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை நாட்டில் பரவலாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆடு வளர்ப்புக்கு அவசியமான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக காப்புறுதி வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் ஆடுகளை வழங்கி வைப்பதனால் ஆடு வளர்ப்பின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் முடிந்துள்ளது.

சிறிய அளவில் கிராமிய மட்டத்தில் ஆடுகள் வளர்ப்பவர்களை சுமார் 3 அல்லது 4 ஆண்டுகளில் ஆட்டுப் பண்ணையாளர்களாக மாற்றுவதற்கு அவசியமான வேலைத்திட்டங்களை இதன் மூலம் முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: