காணாமற்போனவர்கள் தொடர்பாக நம்பிக்கையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, May 30th, 2016

காணாமற்போனவர்களை கண்டுபிடிக்க முடியாதவர்கள் என்ற தீர்மானத்திற்குள் உள்ளடக்கி அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இறந்துவிட்டார்கள் என்றும் முடிவு செய்ய முடியாது. மாறாக காணாமற்போனவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் வழங்கியிருக்கும் சாட்சியங்களின் அடிப்படையிலும், வாக்குமூலங்களின் அடிப்படையில் வெளிப்படையானதும், நம்பிக்கையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

பெரும் அழிவுகளை ஏற்படுத்திய மூன்று தசாப்தத்திற்கும் அதிகமான காலம் நடைபெற்ற வன்முறைகள் மற்றும் யுத்தம் காரணமாக பலர் காணாமல் போயிருக்கின்றார்கள்.

காணாமற்போனவர்களைக் கண்டறியும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கு கிழக்கில் மேற்கொண்டிருந்த விசாரணைகள் மற்றும் பதிவுகளில் 3000 க்கும் அதிகமானவர்கள் காணாமற் போயிருப்பதாக, தமிழ் மக்கள் தமது முறைப்பாடுகளில் பதிவு செய்துள்ளனர்.

காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளில் அநேகமான முறைப்பாடுகள் படைத்தரப்பின் மீதும், புலிகள் மீதும், சில ஏனைய தமிழ் அமைப்புக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கடத்தப்பட்டு காணாமல் போயிருந்ததாகவும், காணாமல் போனவர்களாக கருதப்பட்டவர்களில் சிலரை தடுப்பு முகாம்களில் உறவினர்கள் பார்வையிட்டுள்ளதாகவும், சிலர் இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் என்ற தீர்மானத்திற்குள் உள்ளடக்கி அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இறந்துவிட்டார்கள் என்றும் முடிவு செய்ய முடியாது.

காணாமற்போனவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் வழங்கியிருக்கும், சாட்சியங்களின் அடிப்படையிலும், வாக்குமூலங்களின் அடிப்படையில் வெளிப்படையானதும், நம்பிக்கையானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

அவ்வாறான விசாரணைகளின் ஊடாகவே உறவுகளைப் பறிகொடுத்த எமது மக்களுக்கு நியாயமும், பரிகாரமும், நஸ்டஈடும் வழங்கப்பட வேண்டும். அதைவிடுத்து, எமது மக்களில் பெரும்பான்மையானவர்கள் கண்ணீரைச் சுமந்தபடி பதிவு செய்த முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் மூடிக்கட்டி கோவைகளாகப் போட்டுவிட்டு, கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ்களை வழங்கி விடமுடியாது.

இவ்வாறான முடிவுகள் அரசு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.

எனவே அரசின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், தேசிய நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் அமைய வேண்டும்.

Related posts: