காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் பி.சி.ஆர் சோதனை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் !

Saturday, April 25th, 2020

சுவிஸ் மதபோதகருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு மீண்டும் சோதனை முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரியாலையில் ஆராதனை நடத்திய சுவிஸ் மதபோதகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பைப் பேணிய 20 பேர் காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் கொரோனா தொற்றுச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர்கள் வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எஞ்சிய 14 பேருக்கும் ஏப்ரல் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 10 பேருக்கு தொற்று இருப்பது உறு திப்படுத்தப்பட்டது. இதேவேளை இறுதியாக எஞ்சியிருந்த 4பேருக்கும் நேற்றுச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களுக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகின. கொரோனா தொற்று இருந்தவர்கள் கடந்த 15ஆம் திகதியே அங்கு அவதானிக்கப்பட்டார்கள். அன்றிலிருந்து மூன்று வாரங்கள் முடிந்த பின்னரே எஞ்சியவர்களின் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும்.

தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும்போதும் அவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்தப்படும். அப்போதும் கொரோனா தொற்று இல்லை என்றால் மாத்திரமே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் – எனவும் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related posts: