கல்வியிலே சிறந்த மாவட்டமென கூறிக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்போமேயானால் யார் குற்றவாளி – யாழ் மாவட்ட அரச அதிபர் ஆதங்கம்!

Friday, June 9th, 2023

யாழ் மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களை முடக்குவதற்காகவோ அவர்களின்  வருமானங்களை முடக்குவதற்கான நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. கல்வியிலே சிறந்த மாவட்டமென கூறிக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்போமேயானால் யார் குற்றவாளி என்ற கேள்வி எழுகிறது என யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடலொன்று  இடம்பெறவுள்ளதாக மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டது. இது ஒரு சில ஊடகங்கள் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை நிறுத்துவதற்கான கலந்துரையாடலென செய்தி வெளியிட்டிருந்தனர்.

இது யாழ் மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களை முடக்குவதற்காகவோ அவர்களின்  வருமானங்களை முடக்குவதற்கான நடவடிக்கையோ கிடையாது. 

அண்மையிலும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலை பண்பாடுகளை வளர்க்கும் நோக்கில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தெரிவித்த கருத்து தொடர்பான செய்தியை சிங்கள ஊடகமொன்று செய்தியாக பிரசுரித்திருந்தது.  எனவே இது தேசிய பிரச்சினையாகக் காணப்படுகிறது.

குறிப்பாக இதனை சட்டங்கள், பிரேரணைகளை முன்வைத்து செயற்படுத்த முடியுமென நான் நம்பவில்லை.

அதனுடன் தொடர்புடையவர்களை அழைத்து கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இளம் அர்ச்சகர் போதை மருந்தேற்றி உயிரிழந்த செய்தி மற்றும் சிறுவர்களின் போதைப்பொருள் பாவனை தொடர்பான செய்தி கடந்த சில நாட்களாக வெளிவந்தவண்ணமுள்ளன.

கல்வியிலே சிறந்த மாவட்டமென கூறிக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்போமேயானால் யார் குற்றவாளி என்ற கேள்வி எழுகிறது.

நாம் சிறுபான்மையினமாக இருக்கின்றோம். கல்வியில் போட்டிகள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து எவ்வாறு வெற்றிகரமான நடவடிக்கைளை மேற்கொள்ளலாம்  என்பது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஆகையால் இது சம்பந்தமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணத்திலுள்ளோம். இந் நிலையை கொண்டுவர சுகாதார, கலாச்சார, பண்பாட்டு ரீதியாக எவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன, இவற்றை எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம் என்பதற்காகவே இக் கலந்துரையாடல் நடத்தப்படுகின்றது எனக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: